Thursday, April 19, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - வானமே எல்லை (Simply Fly)

நான் பொதுவாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களை விரும்பி படிப்பதில்லை,  எழுத்துக்கள் தமிழில் இருந்தாலும் மொழி பெயர்ப்பு நூல்கள் எனக்கு அந்நியமாகவே தோன்றும். அனால் இந்த புத்தகம் நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டது போன்று ஒரு தெளிவு. மிகச் சிறப்பாக மொழி பெயர்த்த திரு BR மகாதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு 'சல்யூட்'

'முன் எப்போதும் இல்லாத வாடிக்கையாளர்களையும், புதிய சந்தையையும் உருவாக்கி அதன் மூலம் செல்வம் சேர்ப்பவரே உண்மையான தொழில் முனைவர்' ன்னு சொல்றத கோபிநாத் அவர்களின் வாழ்க்கை நிருபித்து காட்டியிருக்கிறது. சாகசங்களையும், சவால்களையும் எதிகொள்ள துளியும் பயப்படாத துணிச்சலான செயல் வீரரின் கதை தான் இந்த புத்தகம்.

 'வானத்தை லட்சியமா வை, பூமிய பார்த்து நட'ன்னு  சொல்லுவாங்க, அப்படி வாழ்ந்து காட்டிய செயல் வீரர் தான் இந்த கோபிநாத். சாதாரண மனிதர்களுக்கு எட்டாத பல சாகசங்களை நடத்தி காட்டியிருக்கிறார். இவர் ஆரம்பித்த குறைந்த கட்டண விமான சேவை (Air Deccan) இந்திய வான் போக்குவரத்தையே அடியோடு மாற்றியமைத்து.

 சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில், ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்த கோபிநாத் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். பால்  பண்ணை, பட்டு பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்சி, ஹோட்டல் தொழில், பங்கு சந்தை தரகர் என்று பல தொழில்களை செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தேவ கவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியையும் தழுவியிருக்கிறார். தான் வாழ்க்கை முழுதும் புது புது முயற்சிகளை சலிக்காமல் செய்துள்ளார்.

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் முக்கியம்னு சொல்லுவாங்க, ஆனால் கோபிநாத், மிகப்பெரிய முடிவுகளையெல்லாம் மின்னல் வேகத்தில்  எடுத்து சாதித்து கட்டியிருக்கிறார். நீங்கள் ஏதாவது புதுசா சாதிக்கணும்னு நினைக்கிறிங்களா? அடி மேல் அடி விழுதா? சோர்ந்து போய் விட்டீர்களா? இந்த புத்தம் உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியைத்  தரும்.

தொழில் முனைவோருக்கு வேண்டிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தலைமைபண்பு, முடிவெடுக்கும் திறன் போன்ற பல பாடங்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ' கல்லூரிகளில் இந்த புத்தகத்தை பாடமாக வைக்க வேண்டும்' என்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

ஒரு சாதாரண ஆசிரியருக்கு மகனாக பிறந்த, ராணுவத்தில் இருந்து வெளியே  வரும்போது ரூபாய் 6 ,000  மட்டுமே செட்டில்மென்ட் பணமாக பெற்ற கோபிநாத், அதிக மூலதம் தேவைப் படக்கூடிய விமான சேவையை எப்படி ஆரம்பித்தார், எப்படி சாதித்தார் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

ஒவ்வொருவரும்  வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய சாதனை சரித்திரம் இந்த 'வானமே எல்லை'

No comments:

Post a Comment