புதன், 25 ஏப்ரல், 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - இட்லியாக இருங்கள்

'இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறேன் . ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?'

'அலுவலகத்தில் என் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் எனக்கு  உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன? '

'வீட்டுக்கு போறதுன்னாலே வெறுப்பா இருக்கு, என் பேச்சுக்கு வீட்ல மரியாதையே இல்ல'



 இந்த மாதிரி புலம்பல்களை நீங்கள்  கேட்டிருக்கலாம், அல்லது நீங்களே கூட புலம்பியிருக்கலாம், 'இட்லி' எனப்படும் 'எமோஷனல் இன்டலிஜென்ஸ்' திறமையின்மையே இதெற்கெல்லாம் காரணம் என்பதை ஆசிரியர் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்றார். 

ஒருவர் படிப்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கினால் அவரை இன்டெலிஜென்ட் என்று சொல்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் வரை கூட, IQ (Intelligence quotient) தான் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றது என்றே நம்பப் பட்டு வந்தது. ஆனால் மேலை நாட்டினரின் ஆராய்ச்சி முடிவுகள்,

ஒரு மனிதனின் வெற்றியில் புத்திசாலிதனத்தின் பங்கு வெறும் 20 சதவிகிதம் என்றும், வேறு பல காரணங்கள் 80 சதவிகிதம்  என்று கூறுகின்றன.

அந்த 80 சதவிகிதத்தில் மிக முக்கியமான சதவிகிதத்தை பெற்றிருப்பது எமோஷனல் இன்டலிஜென்ஸ் எனப்படும்  ' தன்னையும் தன் உணர்சிகளையும்  திறம்பட நிர்வகித்துக் கொண்டு, பிறருடைய உணர்சிகளையும் புரிந்து கொண்டு நடக்கும் திறன்'  சுருக்கமாக சொல்வதென்றால் 'உணர்சிகளை கட்டுப்படுத்துவது' .

எந்த உணர்ச்சியையும் அடக்கு என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. இயற்கையாக நமக்கு வருகின்ற உணர்சிகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்ப்பவை தான். உணர்சிகளை வெளிக்காட்ட தெரியாவிட்டால் நம்மை ஜடம் என்று கூறி விடுவார்கள். அவை கொஞ்சம்  கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்போதுதான் பிரச்சனை வெடிக்கிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் போன்ற பிரபலங்கள் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்ட நிகழ்வுகளையும் விளக்குகின்றார்.

  • குத்து சண்டை போட்டியில் மைக் டைசன் ஹோலி பீல்டின் காதை கடித்தது.
  • கிரிக்கெட் போட்டியில் மியாண்டட் கிரண் மோரேவை வெறுப்பேற்றியது.
  • டாக்டர் செரியன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது.
  • மணிரத்னம் அவர்களின் அண்ணன் தயாரிப்பாளர் ஜி.வி தற்கொலை செய்து கொண்டது.
இது போன்று பல எடுத்துக்காட்டுகள் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பு, இக்கட்டான சூழ்நிலைகளில், உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எப்படி முடிவுகள் எடுப்பது என்பதை குட்டி கதைகளின் (Case Studies ) மூலம் விளக்கப்பட்டுள்ளது.

மனித மூளையின் அமைப்பும், நம் உணர்சிகளுக்கும் ளைக்கும் உள்ள தொடர்பும் அறிவியல் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு தன்னம்பிக்கை நூல் மட்டுமல்ல, நமது உணர்சிகளுக்கான காரணங்களை அலசி ஆராயும் உளவியல் நூலும் கூட.

எமோஷனல் இன்டலிஜென்ஸ் குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே. தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணிபுரியும் இடத்திலும், சில நேரங்களில் உணர்சிகளை கட்டுப்படுத்த தவறி  விடுகிறீர்களா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

  • நூலின் பெயர் : இட்லியாக இருங்கள்
  • ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்
  • பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

1 கருத்து: